ஒரே முகவரியில் 20 போலி பதிப்பகங்கள்.. அரசின் நூல் கொள்முதல் ஊழலில் அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!
கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்குத் தரம் குறைந்த மற்றும் போலி நூல்களை விநியோகம் செய்ததாகச் சர்ச்சையில் சிக்கியுள்ள 'அகல்விளக்கு பதிப்பகம்' இயங்கும் அதே சென்னை முகவரியில், மேலும் 20 போலி பதிப்பகங்கள் இயங்கி வந்தது ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
தமிழக நூலகத் துறையை அதிர வைத்துள்ள இந்த நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக நாளுக்கு நாள் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
கோவை பெரியார் அறிவுலகத்திற்குத் தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்கு விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டில் சிக்கிய 'அகல்விளக்கு பதிப்பகம்', சென்னை மடிப்பாக்கம் பகுதியிலுள்ள ஒரு முகவரியை முதன்மையாகக் கொண்டு இயங்கி வந்தது.
அந்த குறிப்பிட்ட முகவரியை ஆய்வு செய்தபோது, அருண் புத்தகாலயா, பல்லவி பதிப்பகம், ஓம் பிரசுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் பெயர்களில் ஆவணங்களும், ரசீதுகளும் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே நபர் பல்வேறு பெயர்களில் போலி பதிப்பகங்களை உருவாக்கி, அரசு நூலகங்களுக்கான கொள்முதல் ஆர்டர்களைப் (பெற்று, முறைகேடாகப் புத்தகங்களை விநியோகித்து கோடிக்கணக்கில் நிதி மோசடியில் ஈடுபட்டிருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
இம்முறைகேடு குறித்து மேலும் ஆய்வு செய்தபோது, முறைகேடாக அச்சிடப்பட்ட பல நூல்களுக்குப் போலி பன்னாட்டுத் தரப் புத்தக எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், 'திரிஷா விஜய்', 'விஜய் செல்வம்', 'சூர்யா பாலு' போன்ற கற்பனையான போலி எழுத்தாளர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, தரமற்ற கருத்துகளைக் கொண்ட 300 பக்க நூல்களை அவசர அவசரமாக அச்சிட்டு, அவற்றிற்கு ரூ.1,395 முதல் ரூ.1,445 வரை அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து நூலகங்களுக்கு விநியோகித்துள்ளனர்.
கோவையில் மட்டுமன்றி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல மாவட்ட நூலகங்களுக்கும் இந்த 20 போலி பதிப்பகங்கள் வாயிலாகப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அரசுக்குக் கோடிக்கணக்கில் தவறான நிதி இழப்பை ஏற்படுத்தி, தமிழ் இலக்கிய உலகையும் பொதுமக்களையும் ஏமாற்றிய இந்த மாபெரும் நூல் கொள்முதல் ஊழல் குறித்துச் சிறப்பு விசாரணை ஆணையம் அமைத்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பல முன்னணி எழுத்தாளர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.