undefined

ஆந்திரா பட்டாசு ஆலை பயங்கர விபத்து - 20 பேர் உடல் சிதறி பலியான துயரம்!

 

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காக்கிநாடா மாவட்டம் சமர்லகோட்டா மண்டலத்திற்குட்பட்ட வேட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள 'சூர்யஸ்ரீ' என்ற பட்டாசு உற்பத்தி ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் திடீரென தீப்பற்றி வெடித்தன. இந்த வெடிப்புச் சத்தம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாகக் கூறப்படுகிறது.

வெடிப்பின் தீவிரம் காரணமாகத் தொழிலாளர்களின் உடல்கள் சுமார் 100 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டன. சம்பவ இடத்தைப் பார்த்தவர்கள், உடல்கள் துண்டு துண்டாக வயல்வெளிகளில் சிதறிக் கிடந்ததாகக் கண்ணீருடன் தெரிவித்தனர். உயிரிழந்த 20 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விஜயநகரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த விபத்து குறித்துக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி-யுடன் பேசி மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட நிவாரணத் தொகை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மாநில உள்துறை அமைச்சர் வங்களபுடி அனிதா விபத்து நடந்த இடத்திற்கு நேரில் விரைந்துள்ளார். பட்டாசு ஆலை உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி இயங்கியதா என்பது குறித்துப் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.