தமிழகத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன? - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!
தமிழகத்தில் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்த 'ஆர்.எஃப்-5' துணை ரக கொரோனா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சமோ பீதியோ அடையத் தேவையில்லை என்று தமிழகப் பொது சுகாதாரத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், மரபணு வரிசைமுறை ஆய்விற்காகப் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த 20 மாதிரிகளையும் பரிசோதித்ததில், அவை அனைத்தும் ஒமைக்ரான் உருமாற்றத்தின் துணை ரகமான 'ஆர்.எஃப்-5' வகை வைரஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் இது குறித்து கூறுகையில், தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வெறும் 15 பேர் மட்டுமே மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் சிகிச்சையில் உள்ளனர். 2026-ஆம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 335 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் 1,250 பேருக்கும், 2024-ஆம் ஆண்டில் 990 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டிருந்தது.
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனைகள் மூலமே இவை கண்டறியப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு மிக லேசான அறிகுறிகளே இருந்தன.
தற்போது பரவி வரும் 'ஆர்.எஃப்-5' துணை ரக வைரஸ் அதிக வீரியம் கொண்டதல்ல. இது தீவிர பாதிப்பையோ அல்லது ஆபத்தையோ ஏற்படுத்தாது என்பதால் பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. தற்போது அதிக ஆபத்துள்ள நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன்பாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே முன்னெச்சரிக்கையாகக் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
உடல்நலக் குறைவு அல்லது காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பிற நோய்களால் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் பெரிய அளவிலான கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.