தனுஷ்கோடியில் உயிருடன் கரை ஒதுங்கிய 200 கிலோ எடையுள்ள டால்பின் - ஆழ்கடலில் விட தீவிர முயற்சி!
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சுமார் 200 கிலோ எடையுள்ள பெண் டால்பின் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் ராட்சத டால்பின் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கித் தவிப்பதாக மீனவர்கள் வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் விரைந்து சென்று பார்வையிட்ட போது, கரை ஒதுங்கியது பெண் டால்பின் என்பதும், அது சுமார் 7 அடி நீளமும் 200 கிலோ எடையும் கொண்டது என்பதும் தெரிய வந்தது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், டால்பின் பாதிக்கப்படாமல் இருக்க அதன் மீது தார்ப்பாய் கொண்டு நிழல் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த கால்நடை மருத்துவர் அதற்கு அவசர சிகிச்சையளித்தார்.
மீன்களை வேட்டையாடும் போது ஏற்பட்ட காயம் காரணமாக டால்பினால் தொடர்ந்து நீந்த முடியாமல் கரை ஒதுங்கியிருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த டால்பினை மீட்டு மீண்டும் ஆழ்கடலில் கொண்டு போய் விடும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.