"200 பேர் பலி; 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் - காபூலில் கோரத்தாண்டவம்!" - மருத்துவமனை மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல்!
Updated: Mar 17, 2026, 06:53 IST
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வரும் "திறந்தவெளிப் போர்" சூழலில், காபூலில் உள்ள ஒரு மருத்துவமனை தரைமட்டமாக்கப்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று காபூலில் உள்ள போதைப்பொருள் பழக்கத்திற்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மீது பாகிஸ்தான் விமானப்படை திடீர் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளும் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஜமான் கூறுகையில், "இந்தத் தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் மொஷாரப் ஜைதி, "எந்த மருத்துவமனையையும் நாங்கள் தாக்கவில்லை, இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது" என்று கூறியுள்ளார்.