தமிழர்களின் 2,000 ஆண்டுகால எழுத்து மரபு... ராமநாதபுரத்தில் 'தமிழி நடுகல்' கண்டெடுப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், ஆப்பனூர் பகுதியில் உலகமே வியக்கும் வண்ணம் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான 'தமிழி' (தமிழ் பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய நடுகல் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது வரலாற்று ஆய்வாளர்களைப் பெருவியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் ராமநாதபுரம் ஆப்பனூர் பகுதியில் தீவிரக் கள ஆய்வு மேற்கொண்ட போதுதான் இந்த அரிய நடுகல் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் அதன் விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த நடுகல் கல்வெட்டானது பொது ஆண்டிற்கு முன் (பொ.யு.மு.) முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது, அதாவது இன்றைக்குச் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வரலாற்றுச் சின்னமாகும். இந்த நடுகல்லில், "ஆபன்னூர் ஏறி மாண்டு விழுந்த அத்தியன் கீரன் கல்" என்ற வாசகம் மிகத் தெளிவாகத் தமிழி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஊரின் பெயர் 'ஆபன்னூர்' என்று அழைக்கப்பட்டதும், அவ்வூரைப் பாதுகாக்கவோ அல்லது ஏரிப் பணியின் போதோ வீர மரணமடைந்த 'அத்தியன் கீரன்' என்ற வீரனுக்காக இந்த நடுகல் நடப்பட்டுள்ளது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகளைத் தொடர்ந்து, இந்த ஆப்பனூர் நடுகல் கண்டுபிடிப்பும் தமிழர்களின் மிக நீண்ட எழுத்து மரபிற்கு மற்றுமொரு வலுவான சான்றாக அமைந்துள்ளது.
"இந்த நடுகல் கல்வெட்டு, சங்ககாலத் தமிழர்கள் தங்களது வீரர்களின் தியாகங்களைப் போற்றும் மரபைக் கொண்டிருந்ததோடு, சாதாரண மக்களும் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் பொது இடங்களில் தமிழி எழுத்துக்களைப் பயன்படுத்திய அசாத்திய எழுத்து நாகரிகத்தைக் கொண்டிருந்தனர் என்பதை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது" என ஆய்வுக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.