தமிழகத்தில் அமைதியான வாக்கெடுப்பை உறுதி செய்ய தீவிர கண்காணிப்பில் 20,000 ரவுடிகள்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், தேர்தல் நேரத்தில் வன்முறைகளைத் தவிர்க்கவும் காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 20,000 ரவுடிகளின் செயல்பாடுகளைப் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 4,000 ரவுடிகள் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

ரவுடிகளை அவர்களின் குற்றப் பின்னணி மற்றும் செயல்பாடுகளின் தீவிரத்தைப் பொறுத்து A+, A, B, C என 4 பிரிவுகளாகப் பிரித்துப் பட்டியலிட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ள, தலைமறைவாக இருக்கும் ரவுடிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம் என ரவுடிகளிடம் குற்ற நடைமுறைச் சட்டப்பிரிவுகள் 107, 109 மற்றும் 110 ஆகியவற்றின் கீழ் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டு வருகிறது.

குற்றப்பாதையை விட்டுத் திருந்தி வாழ விரும்பும் ரவுடிகளுக்கு, உரியப் பரிசீலனைக்குப் பின் நன்னடத்தை சான்றிதழ் வழங்கவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் எப்போதுமே பெரிய அசம்பாவிதங்கள் இன்றி தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த மரபைத் தொடரும் வகையில், 234 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்தி முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் ஏற்கனவே பதற்றமான தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. அந்த இடங்களில் கூடுதல் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்தவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.