undefined

இந்தோனேசியாவில் இருந்து 20,000 டன் நிலக்கரி வருகை!

 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு இந்தோனேசியாவிலிருந்து 20,000 டன் நிலக்கரி கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 800 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் அனல்மின் நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 01.02.2023 அன்று முதல், 800 மெகாவாட்டிற்குப் பதிலாக 680 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது.

அதிக அளவிலான எரிபொருள் தேவைப்படுவதால், இறக்குமதி வசதிக்காக அனல்மின் நிலையக் கடற்கரையையொட்டி பிரத்யேகச் சிறு துறைமுகம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது அனல்மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான நிலக்கரி இறக்குமதிப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதன் முதற்கட்டமாக, இந்தோனேசியாவிலிருந்து தனியார் சரக்குக் கப்பல் மூலம் 20,000 டன் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து கடல் வழியாக உடன்குடி அனல்மின் நிலையத்திற்கென அமைக்கப்பட்ட பிரத்யேகச் சிறு துறைமுகத்திற்கு நிலக்கரி கொண்டு வரப்பட்டது.

கப்பலிலிருந்து நிலக்கரியை மின் நிலையத்திற்குத் தடையின்றி கொண்டு செல்லும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மின்வாரியத் துறை தலைமை அதிகாரி ராதாகிருஷ்ணன் இந்த வார இறுதிக்குள் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளார். அதன் பின்னரே நிலக்கரி முழுவதையும் இறக்குமதி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.