திமுக ஆட்சியில் 2,00,000 விசைத்தறிகள், 600 ஜவுளி ஆலைகள் மூடல் - அன்புமணி
தமிழகத்தின் பொருளாதாரத் தூண்களில் ஒன்றான ஜவுளித்துறை, அரசின் தவறான கொள்கைகளால் சீரழிந்து வருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி, 2021-22 ஆம் ஆண்டில் 2,773 ஆக இருந்த ஜவுளி ஆலைகளின் எண்ணிக்கை, தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 600 ஜவுளி ஆலைகளும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆலைகள் மூடப்படுவதற்கு முதன்மையான காரணம் மின்கட்டண உயர்வுதான் என அவர் சாடியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்கட்டணம் சுமார் 42 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது ஜவுளி உற்பத்தியாளர்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அண்டை மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதால், பிற மாநிலத் தயாரிப்புகளுடன் சந்தையில் போட்டியிட முடியாமல் தமிழக ஆலைகள் முடங்கியுள்ளன.
ஆலைகள் மூடப்படுவதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைத் தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு மாற்றத் தொடங்கிவிட்டன. இது இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பெரிதும் பாதித்துள்ளது.
நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தாலேயே தொழில்துறை சீரழிந்து வருவதாகக் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், வரும் தேர்தலில் மக்கள் திமுக அரசுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்று எச்சரித்துள்ளார். ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க அரசு உடனடியாக மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.