20,00,000 மக்கள் வெளியேற்றம்; 400 விமானங்கள் ரத்து - ஜப்பானைத் தாக்கியது துஜுவான் சூறாவளி!
ஜப்பானை அச்சுறுத்தி வரும் சக்திவாய்ந்த துஜுவான் சூறாவளி காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இயல் வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை நோக்கி தீவிரமாக நெருங்கி வரும் பருவகாலப் புயல்களில் ஒன்றான 'துஜுவான்' சூறாவளி, அந்நாட்டில் நள்ளிரவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கரையை கடக்காவிட்டாலும், நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதி வழியே வலிமையாகக் கடந்து செல்வதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தாழ்வான மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளியைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்ப்பதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக, கனகவா பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கிப் பெண் ஒருவர் உள்படச் சிலர் சிக்கிக் கொண்டனர். மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 143 கி.மீ. முதல் சில சமயங்களில் 198 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்று காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.