கரூர் அருகே குளித்தலையில் 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு!

 

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட ஊர்களில் கரூரும் ஒன்று. சங்க காலத்தில் சேரர்களின் தலைநகராகத் திகழ்ந்த இந்த மண்ணில், அவ்வப்போது வரலாற்றுத் தடயங்கள் கண்டறியப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், தற்போது கரூர் மாவட்டம் குளித்தலை அருகிலுள்ள விவசாய நிலம் ஒன்றில் 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தின் உரிமையாளர் ஆறுமுகம். தனது நிலத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மண்வெட்டியால் தோண்டியபோது ஏதோ ஒரு கடினமான பொருள் தட்டுப்பட்டது. ஆர்வமுடன் மண்ணை அகற்றிப் பார்த்தபோது, அது பண்டைய காலத்து முதுமக்கள் தாழி என்பது உறுதி செய்யப்பட்டது.

நிலத்தை ஆழமாகச் சீரமைத்த போது எதிர்பாராத விதமாக இந்த வரலாற்றுப் பொக்கிஷம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீண்ட காலத்திற்கு முன்பே புதைந்திருந்த இந்தத் தாழி, சேதமடையாமல் கண்டெடுக்கப்பட்டது ஆச்சரியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

தமிழர்களின் பண்டைய அடக்கமுறை கலாச்சாரத்தைப் பறைசாற்றும் சான்றுகளாக இந்த முதுமக்கள் தாழிகள் விளங்குகின்றன. இரும்புக்காலம் மற்றும் சங்க காலத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது முன்னோர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல் அல்லது எலும்புகளைப் பெரிய அளவிலான மண்பாண்டங்களுக்குள் (தாழி) வைத்துப் புதைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர்.

காவிரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் இது போன்ற அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் கிடைப்பது அந்தப் பகுதியில் பண்டைய காலத்தில் மனித நாகரிகம் செழிப்பாக இருந்ததை உறுதிப்படுத்துகிறது. பொதுவாக இத்தகைய தாழிகள், இறந்தவர்களுக்குப் பிடித்தமான பொருட்கள், உணவு மற்றும் ஆயுதங்களுடன் அடக்கம் செய்யப்படும் மரபுக்குச் சான்றாக அமைகின்றன.

இந்த அரிய கண்டுபிடிப்பு குறித்துத் தகவலறிந்ததும், அப்பகுதி மக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் பெரும் வியப்புடன் திரண்டனர். கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியைப் பாதுகாப்பான முறையில் கையாளத் தொல்லியல் துறையினருக்கு அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் மேலும் அகழ்வாராய்ச்சி நடத்தினால், இன்னும் பல வரலாற்று ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். கரூரின் தொன்மையை உலகிற்கு உணர்த்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் இப்பகுதியைக் கண்காணிப்பில் வைத்து, முறையாக ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.