2030 ஹாக்கி உலகக்கோப்பை நடத்த தமிழ்நாடு உட்பட 3 மாநிலங்கள் போட்டா போட்டி!
2030-ம் ஆண்டு ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், போட்டிகளை நடத்தும் மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாடு, ஒடிசா, பஞ்சாப் ஆகியவை முன்னணியில் உள்ளன.
இதுகுறித்து ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளர் போலா நாத் சிங் தெரிவித்துள்ளார். மூன்று மாநிலங்களும் போட்டியை நடத்துவதற்கான பரிசீலனையில் இருப்பதாகக் கூறிய அவர், ஒடிசாவுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு என்ன வாய்ப்பு?
ஒடிசா ஏற்கனவே ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகளை இரண்டு முறை நடத்திய அனுபவம் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சென்னை மற்றும் மதுரையில் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இதனால் சர்வதேச போட்டிகளை நடத்தும் உள்கட்டமைப்பு மற்றும் அனுபவம் தமிழ்நாட்டுக்கு சாதகமாக உள்ளன.
மறுபுறம், ஹாக்கி விளையாட்டில் நீண்ட பாரம்பரியம் கொண்ட பஞ்சாப், இதுவரை சீனியர் உலகக்கோப்பை போட்டியை நடத்தியதில்லை. தற்போது ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை அந்த மாநிலம் நடத்தி வருகிறது.
இந்தியாவில் இதுவரை ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை நான்கு முறை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை இந்தியாவில் இதுவரை நடைபெறவில்லை.
2030 போட்டிகளை நடத்தும் உரிமம் எந்த மாநிலத்துக்கு வழங்கப்படும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படவில்லை.