20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலத் தொடக்கம் - ஜப்பானில் களைக்கட்டிய விளையாட்டுத் திருவிழா!
ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (செப். 19) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.
ஜப்பான் நாட்டில் உள்ள ஐச்சி-நகோயா நகரில் அமைந்துள்ள மிசுஹோ பூங்கா தடகள மைதானத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கோலாகலத் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விளையாட்டுத் திருவிழா இன்று முதல் வரும் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இத்தொடரில் ஆசியாவிலுள்ள 45 நாடுகளையும் பிராந்தியங்களையும் சேர்ந்த சுமார் 11,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மொத்தம் 43 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தப் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2022-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்து மொத்தம் 107 பதக்கங்களைக் கைப்பற்றியிருந்தது. அதேபோல், இந்த முறையும் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்று சாதனை படைப்பார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.