நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் 220 மருந்துகள் தரமற்றவை - பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!
நாட்டில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்ச்சல், வலி நிவாரணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளின் தரத்தை அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் காய்ச்சல், வலி நிவாரணம், அமில எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம், சளி, கிருமித்தொற்று மற்றும் அஜீரணப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தப்படும் 220 மருந்துகள் தரமற்றவை என்றும், ஒரு மருந்து போலியானது என்றும் அதிர்ச்சித் தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும் பொருட்டு, இந்தத் தரமற்ற மருந்துகளின் முழுமையான விபரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cdsco.gov.in/ முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.