மேற்காசிய மோதலில் 23 இந்தியர்கள் பலி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!
மேற்காசியப் பகுதியில் தொடர்ந்து நீடித்து வரும் போர்ப் பதற்றம் மற்றும் தாக்குதல்களில் இதுவரை 23 இந்தியர்கள் பலியாகி உள்ளதாகக் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், மேற்காசிய மோதலில் இதுவரை 23 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களில் 15 பேர் வர்த்தகக் கப்பல்களில் பணிபுரிந்த ஊழியர்கள் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேபோன்று, கருங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடந்த தாக்குதல்களில் 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 2 பேரைக் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஓமன் கடலோரப் பகுதியில் பயணித்த வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கந்தர் நஹீம் அஜிஜ் என்ற இந்தியக் கப்பல் பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்தக் கப்பலில் இருந்த 14 இந்திய ஊழியர்களில் 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். உயிரிழந்த நஹீமின் உடலை இந்தியா கொண்டு வர ஓமன் அரசுடன் இணைந்து விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடல்சார் வர்த்தகப் பாதைகளில் பாதுகாப்பையும் அமைதியையும் மீட்டெடுக்க அனைத்துத் தரப்பினரும் உடனடியாகப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளைப் பின்பற்ற வேண்டும் எனப் பாரத அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.