“23 வருஷ போராட்டம்... இதுவரை 220 மனுக்கள் கொடுத்தாச்சு”... தலையுடன் மனுக்களை மூட்டையாக கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் வந்தவபரால் பரபரப்பு!

 

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (50) என்பவர், தனக்கு அரசு வேலை வழங்கக் கோரி கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து 220 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத தால், அந்த அனைத்து மனுக்களையும் மூட்டை கட்டித் தலையில் சுமந்தவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காகத் திருநாவுரசின் தாத்தா தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அரசுக்கு  வழங்கியுள்ளார். அதற்குப் பதிலாக வாரிசுதாரருக்கு அரசு வேலை வழங்குவதாக அப்போது உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிலம் வழங்கியதற்கான அரசு வேலை கோரி கடந்த 2003-ம் ஆண்டு முதல் இதுவரை ஒப்புகைச் சீட்டுடன் சேர்த்து மொத்தம் 220 முறை திருநாவுக்கரசு மனு அளித்துள்ளார். அந்த மனுக்களின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்த அவர், இதுவரை கொடுத்த அனைத்து மனுக்களையும் சேர்த்துப் பெரிய மூட்டையாகக் கட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்துள்ளார்.

நுழைவு வாயிலில் தலையில் மூட்டையுடன் வந்த அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் மூட்டையை வெளியே வைத்துவிட்டு, மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அவர் மீண்டும் ஒரு மனுவைச் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.