வளைகுடா நாடுகளில் தமிழர்களுக்கு உதவ உதவி எண்கள், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழலை கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளில் தற்போது நிலவும் போர் பதற்றத்தால் அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் பாதுகாப்பு குறித்துக் கவலை எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தமிழக அரசு முன்வந்துள்ளது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் எந்த நேரத்திலும் இந்த எண்களைத் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லி கட்டுப்பாட்டு அறை: 011-24193300, 92895 16712, அயலகத் தமிழர் நலத் துறை (இந்தியாவுக்குள்): 1800 309 3793, வெளிநாடுகளில் இருந்து தொடர்பு கொள்ள: +91 80 6900 9901, மிஸ்டு கால் சேவை: +91 80 6900 9900
மத்திய அரசு மற்றும் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு முதலமைச்சர் தமிழர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். தூதரகம் வழங்கும் அவ்வப்போதைய செய்திகளையும் எச்சரிக்கைகளையும் கவனிக்க வேண்டும்.
தமிழர்களின் நிலையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடம் அல்லது தாயகம் திரும்புவதற்கான உதவிகளை ஒருங்கிணைக்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அதில் பெரும் பகுதியினர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் நலன் காக்கத் தமிழக அரசு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.