அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொகுதியில் 24 மணிநேர சட்டவிரோத மது விற்பனை - டாஸ்மாக் பாருக்கு 'சீல்' வைத்த தேர்தல் அதிகாரிகள்!
அமைச்சர் மா. சுப்பிரமணியன் பிரதிநிதித்துவப்படுத்தும் சைதாப்பேட்டை தொகுதியில், தேர்தல் விதிகளை மீறி அனுமதிக்கப்படாத நேரங்களில் மது விற்பனை செய்த பார் ஒன்று அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படைகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், சைதாப்பேட்டை ஸ்ரீராம் நகர் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எண் 926- உடன் இணைக்கப்பட்டுள்ள மதுபான பாரில், விதிகளுக்குப் புறம்பாக 24 மணிநேரமும் மது விற்கப்படுவதாகத் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இது குறித்த புகாரின் அடிப்படையில், கூடுதல் பறக்கும் படையினர் நேற்று சைதாப்பேட்டை ஸ்ரீராம் நகர் பகுதிக்கு விரைந்து சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே காலை நேரத்தில் சட்டவிரோதமாகப் பார் செயல்பட்டுக் கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சைதாப்பேட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், அந்தப் பாருக்கு உடனடியாக 'சீல்' வைக்கப்பட்டது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி இயங்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. வாக்காளர்களுக்கு மதுபானம் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க இத்தகைய சோதனைகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.