"அதிமுகவிலிருந்து 25 எம்.எல்.ஏ-க்கள் தவெகவிற்கு வருவார்கள்" - புகழேந்தி பேட்டி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நம்பிச் சென்றவர்கள் அனாதையாக நிற்பதாகப் பெங்களூரு புகழேந்தி மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அதிமுக தலைமை மீது பல்வேறு புகார்களைப் பட்டியலிட்டார். அதிமுகவை விட்டு தற்போது வெளியேறி வருபவர்களைத் தடுத்து நிறுத்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், மூத்த தலைவர் கே.பி.முனுசாமியும் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அதிமுகவில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து சுமார் 25 எம்.எல்.ஏ-க்கள் விரைவில் தவெகவிற்கு வருவது உறுதி. அதிமுகவின் தற்போதைய தேர்தல் பலம் குறித்துக் கேள்வியெழுப்பிய பெங்களூரு புகழேந்தி, வரவிருக்கும் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மட்டும் முன்னிறுத்தி உங்களால் ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுத் காட்ட முடியுமா என்று சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் பலர் அக்கட்சியிலிருந்து விலகி வரும் சூழலில், பெங்களூரு புகழேந்தியின் இந்த 25 எம்.எல்.ஏ-க்கள் குறித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.