டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு - ஏமாற்றம் தருவதாக சம்மேளனம் அதிருப்தி!

 

தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கித் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு தன்னிச்சையானது என்றும், தங்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்காமல் ஏமாற்றுவதாகவும் கூறி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த ஊதிய உயர்வு குறித்த விபரங்களை வெளியிட்டார்.  டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் தொகுப்பூதியத்தில் ஒரே நேரத்தில் 25 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இந்த அளவிற்கு ஊதியம் உயர்த்தப்படுவது இதுவே முதன்முறை என்றும், இதன் மூலமாக ஊழியர்களுக்கு மாதம் கூடுதலாக ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும் என்றும் அமைச்சர் விக்னேஷ் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த ஊதிய உயர்வு மூலம் கடைகளில் நுகர்வோரிடம் கூடுதல் விலை  வைத்து விற்பனை செய்வது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "அரசு இந்த ஊதிய உயர்வு குறித்து எவ்வித தொழிற்சங்கங்களுடனும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், விரக்தியையும் மட்டுமே அளிக்கிறது. கடந்த 23 ஆண்டு காலமாகத் டாஸ்மாக் ஊழியர்களுக்குத் தொகுப்பூதியம் என்ற பெயரில் மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது" எனச் சம்மேளனம் சாடியுள்ளது.

அரசின் இதர நிறுவனங்களான ஆவின் பாலகங்கள், கூட்டுறவு நியாய விலை கடைகள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியுடன் கூடிய முறையான 'காலமுறை ஊதியம்’ வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய தவெக அரசும் டாஸ்மாக் ஊழியர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாகச் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது. 23 ஆண்டுகள் பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வோ, இதர பணப்பயன்களோ இன்றித் தங்களை 'நவீன கொத்தடிமை முறையில்' வைத்திருப்பதாக அவர்கள் விமர்சித்துள்ளனர். தற்போதைய விலைவாசி மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு இந்த 25% தொகுப்பூதிய உயர்வு எந்த வகையிலும் ஈடு செய்ய உதவாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ள இந்தத் தொகுப்பூதிய உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வத் தொழிற்சங்கங்களை நேரில் அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

அடிப்படை சம்பளத்துடன் கூடிய முறையான காலமுறை ஊதியத்தை வழங்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த ஊதிய உயர்வு விவகாரத்தால் டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் கடைகள் முன்பு ஏதேனும் போராட்டங்கள் வெடிக்குமா என்பதைக் கண்காணிக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.