2.60 லட்சம் பேர் பயன்பெறுவர்... தமிழக அரசு ஊழியர்களுக்கு 8.33% தீபாவளி போனஸ் அறிவிப்பு!
வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025–26ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) ஆகியவற்றில் பணிபுரியும் 'C' & 'D' பிரிவு ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் + 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வரை போனஸ் வழங்கப்படும்.
ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத நிறுவனங்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் வாரிய ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் + 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% வழங்கப்படும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு 8.33% மிகை ஊதியம் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணியக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ₹3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ₹8,400 முதல் அதிகபட்சம் ₹16,800 வரை பெறுவர்.
இந்த அறிவிப்பின் மூலம் தமிழக அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,60,497 தொழிலாளர்கள் பயன்பெறுவர். இதற்காக மொத்தமாக ₹367.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கான தனி ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.