undefined

தமிழகத்தில் 27.53 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு ... பெண் வாக்காளர்கள் அதிகம்!

 

தமிழகத்தில் 2026 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளைத் தவிர்க்க கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட தீவிரத் திருத்தப் பணிகளுக்குப் (SIR) பிறகு, இந்தத் துல்லியமான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த வாக்காளர்கள்: 5,6,707,380 (5.67 கோடி), பெண் வாக்காளர்கள்: 2,89,60,838 (2.89 கோடி), ஆண் வாக்காளர்கள்: 2,77,38,925 (2.77 கோடி), மூன்றாம் பாலினத்தவர்: 7,617 தமிழகத்தின் ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கையில் ஆண்களை விடப் பெண் வாக்காளர்களே 12.21 லட்சம் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025 அக்டோபர் நிலவரப்படி வாக்காளர்கள் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்தது. ஆனால், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகள் என மொத்தம் 74,07,207 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இந்தப் பெரிய அளவிலான நீக்கம், தேர்தலின் போது போலி வாக்குப்பதிவைத் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது பெயர் சேர்க்கக் கோரி 22.8 லட்சம் மனுக்கள் உட்பட மொத்தம் 34.7 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் அனைவரும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

புதிதாகப் பெயர் சேர்த்துள்ள வாக்காளர்களுக்கு விரைவிலேயே தபால் மூலம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் (EPIC Cards) அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள் தங்களின் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்காளர் சேவை மையங்கள் மூலமாகவோ உறுதி செய்து கொள்ளலாம். தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்த 5.67 கோடி வாக்காளர்களும் ஏப்ரல் மாதம் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர்.