தவெக பொறுப்பேற்ற 15 நாட்களில் 29 கொலைகள்... சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் மக்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றுப் பதினைந்து நாட்களே நிறைவடைந்துள்ள சூழலில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திற்குள் மாநிலத்தில் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த 15 நாட்களில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 4 இரட்டைக் கொலைகள் உட்பட மொத்தம் 29 கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுமட்டுமன்றி, பெண்களுக்கு எதிரான 19 பாலியல் குற்றச் சம்பவங்களும் இந்த 15 நாட்களுக்குள் பதிவாகியிருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களின் போது, மாநிலத்தில் குற்றச் செயல்களைத் தடுத்து சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்பதைக் குறிக்கும் வகையில், 'ஆட்சி மாறினால் காட்சி மாறும்' என்ற முழக்கத்தைத் தவெக முன்வைத்திருந்தது:
தற்போது புதிய அரசில் குற்றங்களின் கிராஃப் உயர்ந்து வருவதால், சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை சட்டம்-ஒழுங்கை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முதலமைச்சர் விஜய் என்ன மாதிரியான அதிரடி நடவடிக்கைகளையும், காவல்துறை ரீதியிலான மாற்றங்களையும் மேற்கொள்ளப் போகிறார் என்பதை ஒட்டுமொத்தத் தமிழக மக்களும் தற்பொழுது உற்று நோக்கி வருகின்றனர்.