குருவாயூர் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அறிமுகம்...பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க புதிய வசதி! 

 

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பக்தர்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்குச் சிரமமில்லாத மற்றும் சுமுகமான தரிசனத்தை உறுதி செய்வதே இந்த புதிய திட்டத்தின் முதன்மை நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் குறைக்கவும், நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவும் குருவாயூர் தேவசம் வாரியம் இந்த சோதனை அடிப்படையிலான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தச் சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 300 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆன்லைன் முன்பதிவு வழியாக நாளொன்றுக்கு மொத்தம் 2,400 பக்தர்கள் வரை எவ்விதச் சிரமமுமின்றித் தரிசனம் செய்ய முடியும். ஆன்லைனில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பக்தர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கோவிலுக்கு வந்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதத்துக்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகவும், அடுத்த மாதத்துக்கான முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் குருவாயூர் தேவசம் இணையதளத்தில் (www.guruvayurdevaswom.in) சென்று தங்களது தரிசன நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.