முதல் மனைவியைத் தேடிச் சென்ற கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய 2-வது மனைவி - உ.பி.யில் அதிர்ச்சி!

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், தனது கள்ளத்தொடர்பைக் கண்டித்து முதல் மனைவியைத் தேடிச் சென்ற கணவனை, 2-வது மனைவியே தனது கள்ளக்காதலன் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவைச் சேர்ந்தவர் ராம் கிஷோர் வால்மிகி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சுபியாபானோ (32) என்பவரைச் சந்தித்து காதலித்துள்ளார். சுபியாபானோவுக்கும் ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரைப் பிரிந்த நிலையில் ஒரு மகன் உள்ளான். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகத் திருமணமானவர்களாக வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே, சுபியாபானோவுக்கு 'முச்சாத்' எனப்படும் முன்னா (52) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருப்பது ராம் கிஷோருக்குத் தெரியவந்துள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ராம் கிஷோர் தனது முதல் மனைவியான கவிதா தேவியைத் தேடிச் சென்று அவருடன் மீண்டும் நெருக்கமாகப் பழகத் தொடங்கியதோடு, தொடர்ந்து பண உதவியும் செய்து வந்துள்ளார்.

முதல் மனைவியுடன் கணவன் நெருக்கமாக இருப்பதை அறிந்த சுபியாபானோ ஆத்திரமடைந்து, தனது காதலன் முச்சாத் மற்றும் அவரது நண்பரான முகமது இக்பால் என்ற பசீர் அகமது ஆகியோருடன் சேர்ந்து ராம் கிஷோரைத் தீர்த்துக்கட்டச் சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கதவைத் திறந்துவைத்து காதலனை உள்ளே வரவழைத்துள்ளார். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ராம் கிஷோரை அவர்கள் கத்தியால் குத்துக் கொலை செய்துள்ளனர்.

கொலைக்குப் பிறகு வீட்டில் சிதறிய ரத்தக்கறைகளை மறைக்கத் தரையில் சிமெண்ட் பூசியதுடன், ரத்தக்கறை படிந்த துடைப்பம், ஆடைகள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை மறைத்து வைத்துள்ளனர். பின்னர் சுபியாபானோவின் 16 வயது மகனையும் வரவழைத்து, நால்வரும் சேர்ந்து உடலை மரப்பெட்டிக்குள் திணித்து ரிக்சாவில் ஏற்றிச் சென்று கால்வாய் பாலத்தின் அடியில் வீசிவிட்டுத் தப்பியுள்ளனர்.

கொல்லப்பட்டவரின் முதல் மனைவி கவிதா தேவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சுமார் 170 முதல் 180 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், ரிக்சா சென்ற தடத்தைக் கண்டறிந்து சுபியாபானோ, அவரது காதலன் முச்சாத், கூட்டாளி முகமது இக்பால் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்த சுபியாபானோவின் 16 வயது மகனையும் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.