2 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீரர் சுட்டுக்கொலை!

 

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபலக் குத்துச்சண்டை வீரரும், முன்னாள் உலகச் சாம்பியனுமான சொலனி டெட்டே (38) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு கேப் பகுதியில் உள்ள மடன்சனி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சொலனி டெட்டே காரில் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

வீட்டின் கதவைத் திறப்பதற்காகக் காரில் காத்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் சொலனி டெட்டே மற்றும் காரில் இருந்த அவரது காதலி மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சொலனி டெட்டே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது காதலி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தன் தொழில்முறை குத்துச்சண்டை வாழ்க்கையில் 2 முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

எதிரணி வீரரை போட்டி தொடங்கிய 11 விநாடிகளில் வீழ்த்தி மிக அதிவேக நாக்-அவுட் மூலம் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். 2022-ம் ஆண்டு வரை போட்டிகளில் பங்கேற்று வந்த அவர், பின்னர் போட்டிகளில் இருந்து விலகியிருந்தார். இக்கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், தற்போது தொடர்புடைய 4 பேரைக் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.