அரியானாவில் 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 6 பேர் பலி!
அரியானா மாநிலம் அம்பாலா நகரில் கட்டப்பட்டு வந்த மூன்று அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் உள்ள துல்கோட் கிராமத்தில் 3 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அப்போது அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கட்டிடம் திடீரெனச் சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் அரசு நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
இடிபாடுகளில் இருந்து உடனடியாக 13 பேர் மீட்கப்பட்ட நிலையில், தொடர் தேடுதல் வேட்டையில் இன்று காலை மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.
விபத்து நடந்த இடத்தில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து தொடர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.