கட்டுமானப் பணியில் கிரேன் கவிழ்ந்து விபத்து - என்ஜினியர் உட்பட 3 பேர் பலியான துயரம்!

 

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் விடுதிக் கட்டடப் பணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கட்டுமானப் பொறியாளர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பதி டி.பி.ஆர். சாலையில் தனியார் விடுதி கட்டடக் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. இதில் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்படப் பலரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வழக்கம்போல் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஒருபுறமாகச் சரிந்து கவிழ்ந்தது. அப்போது அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கிரேன் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ராமாராவ், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் சந்தீப் மற்றும் திருப்பதியைச் சேர்ந்த காவலாளி கங்கையா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் கிரேனுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த மேலும் இருவர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.