அசாமில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவுகாத்தியில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள மதஹரியா கிராமத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. அங்கு நேற்று இரவு பெய்த கனமழையால் மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் போது அப்பகுதியில் இருந்த வீடு ஒன்று மண்ணுக்குள் முழுமையாகப் புதைந்தது. அப்போது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் மகள் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்த தம்பதியின் மகன் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.