டெங்கு காய்ச்சலுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு - சென்னையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கிப் பயின்று வந்த 3 மாணவர்கள் டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலநிலை மாற்றம் காரணமாக 'ஏடிஸ்' வகை கொசுக்கள் பெருமளவில் பெருகியுள்ளதால், சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,577 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கிப் படித்து வந்த மாணவ, மாணவிகளில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இரு மாணவர்கள் உயிரிழந்திருந்த நிலையில், தற்போதைய நிலவரம் மேலும் கவலை அளிப்பதாக உள்ளது.
பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் கடந்த நான்கு நாட்களாக மாத்திரைகள் மற்றும் சிகிச்சைப் பெற்று வந்த ஹரிஷ்குமார் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு பொதுமக்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.