கூண்டில் சிக்காமல் போக்கு காட்டிய 3 காட்டுப்பன்றிகள் சுட்டுக் கொலை - கோவையில் அதிரடி!

 

கோவை பி.என். புதூர் பகுதியில் கடந்த ஓராண்டிற்கும் மேலாகக் கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்த 3 காட்டுப்பன்றிகளை வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறும் காட்டுப்பன்றிகள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது தொடர்கதையாகி உள்ளது. பி.என். புதூர் மற்றும் கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக உலா வந்ததால், விளைநிலங்கள் சேதமடைந்ததோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இனப்பெருக்கம் காரணமாகப் பன்றிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் பன்றிகள் உலா வந்து அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தின. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டுகளை அமைத்துப் பன்றிகளைப் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், கடந்த ஓராண்டிற்கும் மேலாகக் காட்டுப்பன்றிகள் கூண்டில் சிக்காமல் அதிகாரிகளுக்குப் போக்கு காட்டி வந்தன.

காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வனத்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

பி.என்.புதூர் பகுதியில் தொடர்ந்து இடையூறு செய்து வந்த 3 காட்டுப்பன்றிகளை வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். உயிரிழந்த காட்டுப்பன்றிகள், அரசு விதிகளுக்குட்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மாமன்ற உறுப்பினர் முன்னிலையில் மருதமலை வனப்பகுதியில் புதைக்கப்பட்டன. அப்பகுதியில் சுற்றும் மற்ற காட்டுப்பன்றிகளையும் உடனடியாகப் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.