சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் இயங்கி வந்த 'கிருஷ்ணா' பட்டாசு ஆலையில் இன்று (ஆகஸ்ட் 13) வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு ஆலைகளில் நடைபெறும் சோதனைகளைக் கண்டித்தும், மூடப்பட்ட ஆலைகளைத் திறக்க வலியுறுத்தியும் சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 12 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடப்பதற்கு முன்பாகத் தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா வெளியிட்ட பதிவில், "தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கவே பட்டாசு ஆலைகளில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. தொழிலாளர்களின் பாதுகாப்பே முதன்மையானது. பட்டாசு தொழிலும், மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்" என உறுதி அளித்திருந்தார். இச்சூழலில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகியிருப்பது அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.