தொழிற்சாலை கதவு சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி; ஓசூரில் பரபரப்பு.. கலெக்டர் நேரில் ஆய்வு!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்பட்டு வரும் ஆட்டோ பாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலையில், நுழைவு வாயில் கதவு சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்பேட்டை பகுதியில் ஆட்டோமொபைல் பாகங்களைத் தயாரிக்கும் பிரபல தனியார் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் முதன்மை நுழைவு வாயிலில் புதிய இரும்பு கதவு அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நேற்று நடைபெற்று வந்தன. தொழிலாளர்கள் சிலர் கதவைப் பொறுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, புதிதாக அமைக்கப்பட்டு வந்த ராட்சத நுழைவு வாயில் கதவு திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.

கனரக இரும்புக் கதவின் அடியில் சிக்கிய 3 தொழிலாளர்களும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொழிற்சாலை வளாகத்தில் இருந்த மற்ற ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. விபத்து குறித்துத் தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். விபத்து நடந்த விதத்தைக் கேட்டறிந்த அவர், பாதுகாப்பு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.

காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த 3 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.