3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை  கொலை வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை தூக்கிலிட உத்தரவு... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!  

 

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் நஸ்ராபூர் பகுதியில் மூன்றரை வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய்ப்பட்டார். இந்த வழக்கில் பீம்ராவ் காம்ப்ளே என்ற 65 வயது முதியவருக்கு மரண தண்டனை விதித்து புனே நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த சிறப்பு நீதிபதி எஸ் ஆர் சலுங்கே இந்த கொடூரச் செயல் அரிதினும் அரிதான பிரிவின் கீழ் வருவதாகக் குறிப்பிட்டு இறுதி மூச்சு வரை தூக்கிலிட உத்தரவிட்டார். கடந்த வாரம் போக்சோ நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மே 1 ஆம் தேதி கோடை விடுமுறைக்காக நஸ்ராபூர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த அந்தச் சிறுமியைப் தின்பண்டங்கள் மற்றும் கன்றுக்குட்டியைக் காட்டுவதாகக் கூறி பீம்ராவ் காம்ப்ளே தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தின் அருகே உள்ள கொட்டகையில் வைத்து அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து புனே கிராமப்புற காவல் துறையினர் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அஜய் மிசார் மொத்தம் 55 சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தார். சிறுமியின் உடலில் 18 காயங்கள் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த 65 வயது முதியவருக்கு ஏற்கனவே 62 வயது பெண் மற்றும் 17 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட குற்றப் பின்னணி இருப்பதையும் சுட்டிக்காட்டி அவருக்கு இந்த அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது.