தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு ‘செக்’ - விதிமீறல்களைத் தடுக்க 30 சிறப்பு குழுக்கள் அமைத்த போக்குவரத்து ஆணையரகம்!
வரவிருக்கும் தொடர் விடுமுறைகள் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களைத் தடுத்து நிறுத்தத் தமிழக போக்குவரத்து ஆணையரகம் அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 19-ஆம் தேதி ஆயுத பூஜை மற்றும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் வரவுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் இயக்கம் அதிகரிக்கக் கூடும். இதனால் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற விதிமீறல்கள் நிகழ வாய்ப்புள்ளது.
இதனைத் திறம்படக் கட்டுப்படுத்தத் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் களமிறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி உட்பட மொத்தம் 3 அலுவலர்கள் இடம்பெறுவார்கள்.
இந்தத் தனிப்படையினர் முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு ஆம்னி பேருந்துகளைக் கண்காணிப்பார்கள்.
சோதனையின் போது அதிக கட்டணம் வசூலிப்பது, வரி நிலுவை வைத்திருப்பது, அதிக சுமை ஏற்றுவது மற்றும் உரிய அனுமதிச் சீட்டு இன்றி இயங்குவது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக அபராதம் விதிக்கப்படுவதோடு, தேவைக்கேற்பப் பர்மிட் ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனப் போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.