30,000 சிறப்புப் பைகள், 600 தூய்மைப் பணியாளர்கள்... பட்டாசுக் கழிவுகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் மாஸ் பிளான்!
தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் சென்னையில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் உருவாகும் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் சேகரித்து அகற்றும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பாகப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காகத் தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 சிறப்புப் பைகள் வழங்கப்பட்டு விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் அறிவுறுத்தலின்படி, தீபாவளி நாளில் நகர் முழுவதும் சேரும் பட்டாசுக் கழிவுகளை இதர குப்பைகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டாசுக் கழிவுகளைச் சேகரிப்பதற்காகத் தூய்மைப் பணியாளர்களுக்குத் தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 சிறப்புப் பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புத் தூய்மைப் பணிக்காகச் சென்னை மாநகராட்சியின் சார்பில் 600 பணியாளர்கள் மற்றும் 350 வாகனங்கள் பிரத்யேகமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீபாவளி நாட்களில் சாலைகளைத் தீவிரமாகச் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிநவீன இயந்திரங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலைகளைப் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் உருவாகும் பட்டாசுக் கழிவுகளைப் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் வழக்கமான வீட்டுக் கழிவுகளுடன் சேர்க்கக் கூடாது என மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து வைத்து, உங்கள் பகுதிக்கு வரும் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் மட்டுமே தனியாக ஒப்படைக்க வேண்டும்.
பெருமளவில் திடக்கழிவுகளை உருவாக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களின் நிர்வாகிகள், தங்களது வளாகங்களில் சேரும் பட்டாசுக் கழிவுகள் அனைத்தையும் தனியாக ஓரிடத்தில் சேகரித்துத் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறைந்த அளவிலான மாசு மற்றும் குறைந்த ஒலி எழுப்பக்கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அரசு அனுமதித்துள்ள நேரங்களான காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும், மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பக்கூடிய தொடர் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குடிசைப் பகுதிகள், மின்மாற்றிகள் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்குள் எரியும் பட்டாசுகளைப் போடுவதையோ அல்லது குவித்து வைத்துத் தீ மூட்டுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சென்னையைத் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கப் பொதுமக்கள் அனைவரும் சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.