3,00,000 நெல் மூட்டைகள் தேக்கம் - திருவாரூரில் இடப்பற்றாக்குறையால் கொள்முதல் பணிகள் பாதிப்பு!
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், குடோன்களுக்கு அனுப்பப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே 3 லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அறுவடைப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 26,351 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் நேற்று வரை சுமார் 3 லட்சம் மூட்டைகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல், கொள்முதல் நிலையங்களிலேயே திறந்தவெளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இடப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகளிடம் புதிய நெல் கொள்முதல் செய்யும் பணி தற்காலிகமாகத் தடைபட்டுள்ளது. மேலும், கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவரும் மிதமான முதல் பலத்த மழை காரணமாக இந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.