திருநெல்வேலியில் 3,000 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு - தொல்லியல் ஆய்வில் சாதனை!

 

திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவர்கள் மேற்கொண்ட தீவிரக் கள ஆய்வில், சுமார் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பானை ஓடுகள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நெல்லை உழக்குடி பகுதியின் அருகே அமைந்துள்ள நெடுங்கல் பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். ஆய்வின் போது, அந்த நெடுங்கல் அருகே அந்துப்பூச்சியின் உருவம் துல்லியமாகப் பொறிக்கப்பட்ட அரிய பானை ஓடு ஒன்றும், பழங்காலக் கலைநுட்பம் மிளிரும் பானை மூடித் துண்டும் கண்டறியப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட இந்த பானை ஓடுகள் மற்றும் அதன் மீதான குறியீடுகளை ஆய்வு செய்த தொல்லியல் வல்லுநர்கள், இவை சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்காலத் தமிழர்களின் பயன்பாட்டில் இருந்தவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இக்கண்டுபிடிப்பு அப்பகுதியின் பழங்கால நாகரிகத்தையும், பண்டைய மக்களின் கலை உணர்வையும் வெளிப்படுத்தும் முக்கியச் சான்றாகப் பார்க்கப்படுகிறது.