3200 குதிரைத்திறன், 2400 கிலோவாட் எஞ்சின், 120 கி.மீ. வேகம்... நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் நாளை தொடக்கம்... என்னென்ன வசதிகள் தெரியுமா?

 

இந்தியாவின் முதல் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஹைட்ரஜன் ரயில் நாளை ஜூலை 17ம் தேதிபிரதமர் நரேந்திர மோடியால் ஹரியானாவின் ஜிந்த் - சோனிபத் இடையே தொடங்கி வைக்கப்படவுள்ளது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மாற்று எரிசக்தியில் இயங்கும் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா? 

உலகின் மிக நீளமான மற்றும் சக்திவாய்ந்த வடிவமைப்பு. இந்த ரயில் மொத்தம் 10 பெட்டிகளைக் கொண்டது. இதில் 8 பயணியர் பெட்டிகளும், 2 எஞ்சின் இயக்கும் பவர் கார்களும் அடங்கும். 3,200 குதிரைத்திறன் மற்றும் 2,400 கிலோவாட் ஒருங்கிணைந்த மின் திறன் கொண்ட எஞ்சின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. உலகளவில் இயக்கப்படும் ஹைட்ரஜன் ரயில்களில் இதுவே மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும்.

இந்த ரயிலில் 682 சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. புறநகர் மற்றும் குறுகிய தூரப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஒரே நேரத்தில் சுமார் 2,600 பயணிகள் வரை தாராளமாக இதில் பயணிக்க முடியும்.

வழக்கமான டீசல் ரயில்களைப் போலப் பயங்கர சத்தமோ அல்லது அதிர்வுகளோ இதில் இருக்காது. மின்சார ஆற்றலால் இயங்குவதால், சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். இதனால் பயணிகள் அமைதியான முறையில் பயணிக்கலாம். சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலின் உட்புறம் நவீன எல்.இ.டி விளக்குகள், காற்றோட்ட வசதிகள் மற்றும் பயணிகளுக்கான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் டீசலுக்குப் பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்கள் மூலம் இயங்குகிறது. ஹைட்ரஜனும் காற்றில் உள்ள ஆக்சிஜனும் வேதிவினை புரிந்து மின்சாரத்தை உருவாக்குவதால், இந்த ரயிலில் இருந்து நச்சுப் புகைக்குப் பதிலாக வெறும் நீராவியும் வெப்பமும் மட்டுமே வெளியேறும். 100% மாசற்ற பசுமைப் பயணம் இதுவாகும்.

ரயிலின் பவர் காரில் ஹைட்ரஜன் செல்களுடன் 'லித்தியம் பெர்ரோ பாஸ்பேட்' பேட்டரிகளும் இணைக்கப்பட்டுள்ளன. ரயில் வேகம் எடுக்கும்போது இந்த பேட்டரிகள் கூடுதல் ஆற்றலை வழங்கும். ரயில் நிலையங்களை நெருங்கி வேகம் குறையும் போது, மீதமுள்ள மின்சாரம் மூலம் இந்த பேட்டரிகள் தானாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும்.

சென்சார்கள்: ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்துவதால் பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ரயிலில் எங்கும் வாயு கசிவு ஏற்படாமல் இருக்க 'ஹைட்ரஜன் லீக் டிடெக்டர்கள்' மற்றும் தீ விபத்துகளைத் தடுக்கும் 'ஃபிளேம் டிடெக்டர்கள்' பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110 முதல் 120 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்றாலும், பாதுகாப்பு கருதி தொடக்கத்தில் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் இயக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வே துறையை 2030-க்குள் 'பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வு' கொண்ட துறையாக மாற்றும் இலக்கில், இந்த ஹைட்ரஜன் ரயில் ஒரு புதிய மைல்கல்லாக அமையப் போகிறது.