சட்டப்பேரவையை நேரில் கண்டுகளித்த 32,055 பேர்: சபாநாயகர் பெருமிதம்!

 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேரலையாகத் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், அதனைத் நேரில் பார்வையிடும் ஆர்வத்துடன் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அந்த வகையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்ற கடந்த 28 நாட்களில் மட்டும் சுமார் 32,055 பேர் பேரவையைப் பார்வையிட நேரில் வந்துள்ளதாகச் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தொடரின் சிறப்பம்சமாக, இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்களிடையே ஜனநாயக அமைப்புகளின் மீது உள்ள ஆர்வம் வெளிப்பட்டுள்ளது. இப்பார்வையின் போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 76 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் பேரவை நிகழ்வுகளை நேரில் கண்டுகளித்துள்ளனர்.

வழக்கமாகச் சராசரியாக 20 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே வருகை தருவது வழக்கம். ஆனால், நடப்பு கூட்டத்தொடரில் வழக்கத்தை விட மிக அதிகமாக 76 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவையின் செயல்பாடுகள் மற்றும் சட்டமியற்றும் முறைகளை இளம் தலைமுறையினர் நேரில் தெரிந்துகொள்ள இந்த வருகை பெரிதும் உதவியாக அமைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.