சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் இயந்திரக் கோளாறு - 322 பயணிகள் தவிப்பு; பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
சென்னையிலிருந்து 322 பயணிகளுடன் சிங்கப்பூர் செல்வதற்காகப் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதால் அதன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட முயன்ற விமானம் ஓடுபாதைக்குச் செல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, விமானி மேற்கொண்ட வழக்கமான பரிசோதனையின் போது திடீரென இயந்திரக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. உரிய நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், நடுவானில் நிகழவிருந்த பெரும் அசம்பாவிதம் நூலிழையில் தவிர்க்கப்பட்டது.
விமானத்தின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அதில் பயணம் செய்த 322 பயணிகளும் உடனடியாகப் பாதுகாப்பாக இறக்கப்பட்டு அருகிலுள்ள விடுதிகளில் தங்குவதற்கு விமான நிலைய நிர்வாகம் ஏற்பாடு செய்தது. பழுதுபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், விமானம் உரியப் பரிசோதனைகளுக்குப் பிறகு விரைவில் சிங்கப்பூர் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.