undefined

35 தொகுதிகளா? 25 தொகுதிகளா? இன்று திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறுகின்றன.

கடந்த சில வாரங்களாகவே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே மறைமுகமான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை தனது செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கருதி 35 இடங்கள் வரை கேட்கத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் விரும்புவதாகத் தெரிகிறது.

திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள நிலையில், அதிக இடங்களில் திமுக நேரடியாகப் போட்டியிட (உதயசூரியன் சின்னத்தில்) முடிவு செய்துள்ளது. இதனால், கூட்டணிக் கட்சிகளுக்குக் கடந்த முறையை விடக் குறைவான இடங்களையே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரசுக்கு 20 முதல் 25 இடங்களுக்குள் மட்டுமே ஒதுக்க திமுக முன்வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்தது மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை போன்ற காரணங்களால், கூட்டணிக் கணக்குகளை மிகவும் கவனமாகக் கையாள திமுக தலைமை விரும்புகிறது.

திமுக தரப்பில் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவும், காங்கிரஸ் தரப்பில் தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். இன்றைய கூட்டத்தில் தொகுதி எண்ணிக்கை குறித்த இறுதி முடிவு எட்டப்படாவிட்டாலும், இரு கட்சிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.