இன்றுடன் தொடர் விடுமுறை நிறைவு - சென்னை திரும்ப 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
இன்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்றுடன் தொடர் விடுமுறை முடிந்து நாளை சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த செப்.11 மற்றும் 12 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசுப் பேருந்துகளில் சுமார் 2.31 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
விடுமுறை முடிந்து இன்று (செப்.14) மற்றும் நாளை (செப்.15) ஆகிய தேதிகளில் பொதுமக்கள் சிரமமின்றி சென்னை திரும்ப ஏதுவாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு மட்டும் மொத்தம் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செப்.14-ஆம் தேதியான இன்று கிளாம்பாக்கத்திற்கு 2,240 சிறப்புப் பேருந்துகளும், செப்.15-ஆம் தேதியான நாளை 1,325 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
இது தவிர, மாதவரம் பேருந்து முனையத்துக்கு 160 சிறப்புப் பேருந்துகளும், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகக் கோயம்பேட்டுக்கு 370 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கத்திலிருந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, செப்.14 மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும், செப்.15 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் இயக்கப்பட உள்ளன. பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், தேவைக்கேற்ப உடனடியாகக் கூடுதல் பேருந்துகளை இயக்கவும், இயக்கத்தைக் கண்காணிக்க ஒருங்கிணைப்பு அலுவலர்களைப் பணியில் ஈடுபடுத்தவும் போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.