போகோ ஹராம் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து 360 பேர் மீட்பு! 

 

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், 'போகோ ஹராம்' பயங்கரவாதிகளின் பிடியில் சிக்குண்டு தவித்து வந்த 360 பொதுமக்களை நைஜீரிய ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது.

நைஜீரியாவின் பொர்னோ மாகாணத்தில் உள்ள மண்டரா மலைப்பகுதி, போகோ ஹராம் பயங்கரவாதிகளின் முக்கியப் பதுங்கு இடமாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நைஜீரிய கூட்டுப் படை ராணுவம் நேற்று தேடுதல் வேட்டையை நடத்தியது.

ராணுவத்தின் இந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பயங்கரவாதிகள் பின்வாங்கி ஓடியதை அடுத்து, அங்கு அவர்களின் பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 360 பொதுமக்களை ராணுவம் வெற்றிகரமாக மீட்டது.

மீட்கப்பட்ட 360 பேரும், இந்த 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நைஜீரியாவின் பல்வேறு கிராமங்களில் இருந்து போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கடத்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. பல மாதங்களாகப் பசி, பட்டினி மற்றும் பயங்கரவாதிகளின் சித்திரவதைகளுக்கு மத்தியில் மரணப் பிடியில் இருந்த இவர்கள்,  ராணுவத்தால் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவிகளும், உணவும் வழங்கப்பட்டு வருகின்றன.

நைஜீரியாவில் போகோ ஹராம் அமைப்பு மட்டுமின்றி, ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா போன்ற பிற சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளும் கால்பதித்து, தங்களின் கொடூர முகத்தைக் காட்டி வருகின்றன.