நகைக்கடனை மாற்றித் தருவதாகக் கூறி வங்கிகளிடம் ரூ.50 லட்சம் மோசடி - 37 வயது பெண் கைது!

 

கேரளாவில் முன்னணி வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களை நூதன முறையில் ஏமாற்றி, நகைக்கடனை மாற்றித் தருவதாகக் கூறி சுமார் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்த 37 வயதுப் பெண்ணை ஆர்யன்கோடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம் மாவட்டம் செம்பூர் ஒட்டசேகரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷா (37). இவர் வங்கிகளின் கடன் நடைமுறைகளைப் பயன்படுத்தி மிகத் துணிகரமாகப் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி செம்பூரில் உள்ள பிரபல வங்கி ஒன்றின் மேலாளரை நேரில் அணுகிய நிஷா, மற்றொரு நிதி நிறுவனத்தில் தனக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைக்கடன் நிலுவையில் இருப்பதாகவும், அந்தக் கடனை இந்த வங்கிக்கு மாற்ற விரும்புவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிஷாவின் பேச்சை நம்பிய வங்கி நிர்வாகம், ரூ.50 லட்சம் கடனுக்கு ஒப்புதல் அளித்து அந்தப் பெருந்தொகையை நிஷாவின் இசாஃப் வங்கி சேமிப்புக் கணக்கிற்கு அனுப்பியுள்ளது. ஆனால், பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்ட அடுத்த நொடியே நிஷா அங்கிருந்து சாமர்த்தியமாகத் தலைமறைவானதுடன், அந்தப் பணத்தை உடனடியாகப் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பிரித்து மாற்றியுள்ளார். வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ஆர்யன்கோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

ஆர்யன்கோடு காவல் நிலைய ஆய்வாளர் சாபு தலைமையில், உதவி ஆய்வாளர்கள் பிரவீன் குமார், ஷீபா மற்றும் காவலர்கள் ஜெயபிரகாஷ், அக்ஷய் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், நிஷா பணத்தை மாற்றிய வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகளைப் பின்தொடர்ந்தனர். இதன் அடிப்படையில் பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, தலைமறைவாக இருந்த நிஷாவைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நிஷாவிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கரிங்கல்லத்தாணி பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றையும் அவர் இதே பாணியில் ஏமாற்றிப் பணம் பறித்திருப்பது அம்பலமானது. மேலும், கேரளாவின் பல்வேறு முன்னணி நிதி நிறுவனங்களையும் அவர் இதேபோல் அணுகி மோசடி செய்ய முயன்றதைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த துணிகர மோசடியில் நிஷாவிற்குப் பின்னால் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா அல்லது யாருடைய தூண்டுதலின் பேரில் அவர் வங்கிகளை அணுகினார் என்ற கோணத்திலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நிஷா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.