அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான விசாரணை - அரசு தரப்பு விளக்கம்!
அதிமுகவில் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டதற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற தவெக அரசின் பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் கட்சித் கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த காலகட்டத்திலேயே, மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா மற்றும் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர். இவர்களது ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுக்கும் முன்பே, அதனைத் தவிர்க்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் அவசரமாக ஏற்றுக் கொண்டது செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், இந்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்காலத் தடையும் கோரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட 4 அதிமுக எம்எல்ஏக்களும் எவ்வித வற்புறுத்தலும் இன்றி, தங்களின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தானாக முன்வந்து பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என்று விளக்கமளித்தார்.
மேலும், 4 பேருக்கு எதிரான தகுதி நீக்கப் புகார் குறித்துச் சபாநாயகர் ஏற்கனவே சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார் என்றும், உரிய விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி, தகுதி நீக்கப் பிரமாணங்கள் நிலுவையில் இருக்கும் போது ராஜினாமாவை ஏற்பது மக்கள் தீர்ப்பையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தையும் நீர்த்துப்போகச் செய்யும் செயல் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.