நெல்லையில் 4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை... மத போதகருக்கு 4 தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
திருநெல்வேலியில் பைபிள் வகுப்பு நடத்துவதாகக் கூறி 4 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கிறிஸ்தவ மத போதகருக்குத் திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 4 தூக்கு தண்டனைகளை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தகுளத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஆபிரகாம் (53) தனது வீட்டில் பைபிள் வகுப்பு நடத்துவதாகவும், வெளியூர் சபை ஊழிய நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 12, 13 மற்றும் 8 வயதுடைய 4 சிறுமிகளைத் தனது வீட்டில் அடைத்து வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி ஊரக மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி ஆபிரகாமை கைது செய்தது.
வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், மத போதகராகவும் தந்தை வயதுடையவராகவும் இருந்து கொண்டு இக்கொடூர குற்றத்தைச் செய்ததால், 4 சிறுமிகளின் பாதிப்புக்கும் தலா ஒன்று வீதம் 4 தூக்கு தண்டனைகளும், ரூ.52,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கத் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பைக் கேட்டதும் ஆபிரகாம் நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 17 போக்சோ வழக்குகளில் 17 பேருக்குத் தண்டனை கிடைத்துள்ளது. அதில் 2 பேருக்குத் தூக்கு தண்டனையும், 4 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தெரிவித்துள்ளார்.