திருத்தணி முருகன் கோயில் கோபுர சிலை விழுந்து 3 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்!

 

திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது கோபுரத்தின் உச்சிச் சிலை உடைந்த விழுந்ததில் 3 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திருத்தணி முருகன் கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள கோபுர வாசலில் இன்று காலை வழக்கம்போல் பக்தர்கள் பொது வழியில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.

கோபுரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு ஒன்று அங்கிருந்த யாழி சிலையை (கோபுரச் சிற்பம்) பிடித்து ஆட்டியுள்ளது. இதனால் எதிர்பாராதவிதமாக அந்தச் சிலை உடைந்து, அதன் கற்கள் கீழே நின்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது பலமாக விழுந்துள்ளது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பக்தர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகத் திருத்தணி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் நின்றபோது நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.