தலைமைச் செயலகத்தில் பரபரப்பு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சிராப்பள்ளி கம்பரசன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், தங்கள் நிலம் மற்றும் வாடகை வீடு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண புகார் அளிப்பதற்காகச் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ளனர். தான் வசித்து வரும் வாடகை வீட்டின் உரிமையாளர் தங்களைக் கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்துவதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறி, அவர்கள் கொண்டு வந்திருந்த தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளனர்.
தலைமைச் செயலக வளாகத்திலேயே அவர்கள் திடீரென மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியாளர்களும், அங்கு பணியில் இருந்த மருத்துவக் குழுவினரும் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.