ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி - மேலும் 4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு!
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மேலும் 4 ஐரோப்பிய நாடுகள் தங்களது ஆதரவை முறைப்படியாகத் தெரிவித்துள்ளன.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. கவுன்சில் கூட்டத்தின் இடையே, முதல் 'விசெக்ராட் குழு' மற்றும் இந்தியா இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஆதரவு அளிக்கப்பட்டது. அதன்படி, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய 4 நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியா உலக நாடுகளின் தெற்குப் பிராந்தியத்தின் முக்கிய நாடாகவும், இந்தோ-பசிபிக் பகுதியில் வளர்ந்து வரும் வல்லரசாகவும் திகழ்வதால், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற முழுத் தகுதியுடையது என ஸ்லோவாக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுராஜ் ப்ளானார் தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய கட்டமைப்பு 21-ஆம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும், காலனி ஆதிக்க காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பில் மக்கள் தொகை மற்றும் பொருளாதார செல்வாக்கிற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. மேலும், கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை 15-ல் இருந்து 25 அல்லது 26 ஆக விரிவுபடுத்த வேண்டும் என்று இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் (G4 நாடுகள்) தொடர்ந்து கோரி வருகின்றன.
ஏற்கனவே பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய முன்னணி நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சீனா மட்டுமே இதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது. இந்தச் சூழலில், நான்கு ஐரோப்பிய நாடுகளின் இந்தப் புதிய ஆதரவு இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளுக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.